Wednesday 17 March 2010

புதிய மொந்தையிலும்... அட... பழைய கள்ளுங்கோய்...!

வணக்கம்!.. வாங்க...

புதுசாக்க... ம்ம்ம்... உண்மையிலுமே... ரொம்ப தினுசு தினுசாக்க பல chapterருங்க ரிலீசாயிருந்தாலும் (அட நம்ம ‘கதவ திற... காத்து வரட்டும்‘ மேட்டருதான்) மறக்கப்பட்ட.... இல்லயில்ல... பல பேரால மறைக்கப்பட்ட மேட்டரு இல்லாம போயிருமா?

கவலை கொள்ளாதே மனமே! கண்முன்னே காயங்கள் சரிந்ததைக்கண்டும்... நீ கலங்காது பஜனை செய் மனமே!

ஏப்ரல் 2009ல் கிறுக்கிய கிறுக்கலொன்றை (இப்ப புரியணுமே புதிய மொந்தையிலும்.................... என்றால் என்னன்னு) உங்களுடன் பகிர்ந்துக்க ஓர் ஆவலில் கீழே இணை..த்..து..ள்..... (ஏதோ அசரீரி கேட்டகிறாப் போல இல்ல!)

அசரீரி: ஏம்பா!கவிஜையெல்லாம் எழுத தெரியுமுன்னுட்டு......மொக்கை போடப் போறியளோ???

"ண்ணா... அதெல்லாம் ஒண்ணுமில்லீங்கண்ணா... ஒரு முயற்சி தாணுங்கண்ணா... வாசிச்சப்புறம்.... நல்லது கெட்டதுகளை சொல்லுங்கண்ணா!"




உலகத்தின் இயக்கத்தில்
இதுவுமோர் நாடக மேடையாம்!
உயிர்களை வைத்தே
காட்டுவாரிங்கு வேடிக்கையாம்!
பாரே! நீ வேடிக்கை பார்!
விசித்திர ரசிகன் நீ!
அவர்கள் சிரித்தால் நீ அழுவாய்!
அவர்கள் அழுதால் நீ சிரிப்பாய்!

உணர்வுகளின் கூடாரங்களுள்
கருத்தரித்த சுதந்திரப் பிண்டங்கள்
சருகுகள் போலிங்கு
கருகிப்போகும் குருத்தான செண்டுகள்!
இரவுகள் தோறும் மடியல்கள்
இரத்தத்தில் தோய்ந்த விடியல்கள்
மரண ஓலங்களின் மறைவில்
மரணித்துப்போகும் மனிதநேயங்கள்!
மாண்பு மிகு உலகே
மறைந்திருந்தே வேடிக்கை பார்...!

வீடு வாசல்கள் தோறும்
இழவுகள் தினந்தோறும்
காடுகள் மேடுகள் எங்கும்
கல்லறைகளே நிறைந்து போகும்!
வாழும் மண்ணில் வாழ
வாழ்க்கை கேட்டு நின்றோர்
பாழும் உலகில் இன்று
பயங்கரவாதிகளான கோலம்!
மாண்பு மிகு உலகே
மறைந்திருந்தே நீ வேடிக்கை பார்...!

ஜனநாயகமெனும் போலிப் போர்வை
நாற்காலிகள் மேல் ஒரப் பார்வை
நாவில் வழியும் விஷ வேர்வை
நயவஞ்சக வார்த்தைகளின் கோர்வை!
குள்ள நரிக் கூட்டம்
இரை தேடும் ஓநாய்க் கூட்டம்
தெருநாய்களின் கூட்டம் - ஒன்றாய்ச்
சேர்ந்து போடுகின்றதாம் மனிதாபிமானக் கூட்டம்!
மாண்பு மிகு உலகே
மறைந்திருந்தே வேடிக்கை பார்...!

பாலூட்டி சீராட்டி, பசித்தால் அறிவுச் சோறூட்டி
நேசக் கரத்தால் வலுவூட்டி, வஞ்சகங்களை வடிகட்டி
வாழ்த்தி வழிகூட்டி அனுப்பிவைப்பார் என்றால்....!
போர் மூட்டி, கண்ணில் நீர் ஊற்றி, கருமாதிப் பால் ஊற்றி
நன் நிலை மாற்றி, மனச் சோர்வூட்டி, மோசச் சுமையூட்டி
மிச்சோரையும் இரசாயணத்தில் வாட்டி, பரலோகம் ஏற்றிபின்
அரிதாரம் ஒற்றி, அரங்கேறுகின்றதோர் நயவஞ்சக நாடகம்!
மாண்பு மிகு உலகே
மறைந்திருந்தே வேடிக்கை பார்...!

ஒற்றைத் தடியைக் கொண்டு, உலகை தட்டி வென்று
பெற்ற சுதந்திரம் கண்டு, பெருமை கொண்டார் அன்று,
நூற்றுக் கதராடை கட்டி, செய்கையில் செம்மை நாட்டி
ஒற்றை மலர்ச் சூடி, ஒளிர்ந்தார் குடும்பம் தனை காட்டி,
வெண்தாடித் தந்தையின் ஒளி ஏற்றி, அண்ணனின் அடியையும் பற்றி
பொன்னிற மேனியனும், கரு தேக ராஜனும்
புரட்சிக் கவிஞரும், எண்ணில்லா அறிஞரும்
எல்லாம் கொண்டோர் - இன்று,
வெண்பறவையின் கால்களில் குண்டுகள் கட்டி
உறவுகளின் தலைகளில் இடிகளைக் கொட்டி
சென்னிறக் குளத்தில் முழுநீராடி
செந்தமிழ் தோட்டத்தில் பிணங்கள் மீதிளைப்பாறிபின்
நாமறியோம் பராபரமேயெனக் கண்களில் நீர் கூட்டி
கள்ளக் கதைகள் பல பேசி
தேர்தலை நாடி, மேடைமீதேறி, ஓடியோடி
ஆடுகிறார்களோர் போக்கிரியாட்டம்!
மாண்பு மிகு உலகே
மறைந்திருந்தே வேடிக்கை பார்...!

அது சரி!....
ஓநாய் மீது புகார் என்று சிங்கத்திடம் சென்றதாம் புள்ளிமான்!

ஆட்ட நாயகனும் நீயே, ஆட்டும் நாயகமும் நீயே
விட்ட வில்லவனும் நீயே, தைத்த பாணமும் நீயே
கிள்ளுபவனும் நீயே, தாலாட்டுபவனும் நீயே
எரிப்பவனும் நீயே, அதை அணைப்பவனும் நீயே!
சுற்றிச் சுழன்று நடக்கின்றதோர் கோலாட்டம்
அதில் அத்தனை பேர் மீதும் நூலோட்டம்
வித்தைகள் பல தெரிந்த மேல்மட்டம் - நீ
காட்டுவதோ யமகாத பொம்மலாட்டம்!
சூழ்ச்சித் திரு உலகே
மறைந்திருந்தே நூலாட்டி வேடிக்கை பார்...!

மாவோசேயைக் கண்டாய், மரண மதம் கொண்டாய்
ஷேயைப் புதைத்தாய், தோறாதென உரைத்தாய்
ஹோ ச்சீ, அரபாத், காஸ்ரோ என வரக் கஸ்டங்கள் என்றாய்
மண்டலாய் கண்டு கிண்டலாய் நின்றாய்
மாட்டீன் லூதரை மிக மரியாதையாய்க் கொன்றாய்
ஆண்டுகள் தாண்ட மாற்றங்களென்று மழுப்பினாய்! - இத்தகையதாய்
நீ முன்னொற்று சொல்வாய், பின்னொன்று செய்வாய்
விண்ணென்ற கூரையின் கீழ் இன்னும் என்னென்ன வலைகளை நீ நெய்வாய்!?
தந்திரத் திரு உலகே
மறைந்திருந்தே குழி தோண்டி வேடிக்கை பார்...!

உயிர்களை தோற்றப் புது வழிகள் தேடுகின்றாய்
விண்ணைத் தாண்டி விஞ்ஞானம் வளர்க்கின்றாய்
கடவுளின் துகள்களைக் காண கோடிகள் கருக்குகின்றாய்
காணாக் கிரகங்களில் வாழ வழி தேடி அலைகின்றாய்!
இனி வரும் உயிர்களைக் காக்க இத்துணை ஆயத்தங்கள் செய்யவேண்டியோ
இருக்கும் உயிர்களைக் போக்க அழிவாயுதங்கள் செய்து விற்கின்றாய் நீ!?
உயிர் கொன்ற பணம் கொண்டே உயிர் காக்க வேண்டும் என்றால்
உயிர் நீத்த பிணங்களைத் தின்றும் உயிர் வாழக் கற்றுக்கொள்!

கொடூரத் திருகுதாள பாரே நீ பார்...!
மறைந்திருந்தே மௌனமாக வேடிக்கை பார்
நீ விட்ட அம்புகளே உன்னைத் தைக்கமட்டும்
நீ செய்த கந்தக்காலன்களே உன்னை எரிக்கமட்டும்
உன் கண்ணிகளிலும் மரணபயம் தோன்ற மட்டும்
கால ஓட்டத்தில் நீ காணாமல் போகமட்டும்
நன்றாகவே வேடிக்கை பார்...!!!!