Friday 19 November 2010

எம்மைத்... தீட்டி... தீட்டி...வைரமாய்

படைப்போம் படைப்போம்
புரட்சிகள் படைப்போம்
உடைப்போம் உடைப்போம்
இயலாமை உடைப்போம்

எடுப்போம் எடுப்போம்
அறிவாயுதம் எடுப்போம்
தவிர்ப்போம் தவிர்ப்போம்
அறியாமை தவிர்ப்போம்

துறப்போம் துறப்போம்
சுயநலம் துறப்போம்
தடுப்போம் தடுப்போம்
இருளினை தடுப்போம்

மறப்போம் மறப்போம்
வேற்றுமை மறப்போம்
நிறைப்போம் நிறைப்போம்
ஒற்றுமை நிறைப்போம்

மறுப்போம் மறுப்போம்
புறங்களை மறுப்போம்
தெரியோம் தெரியோம்
கறைகளாய்த் தெரியோம்

அறிவோம் அறிவோம்
தன்பலம் அறிவோம்
புனைவோம் புனைவோம்
புதியன புனைவோம்

அழிப்போம் அழிப்போம்
மடமையை அழிப்போம்
வளர்ப்போம் வளர்ப்போம்
தன்மானம் வளர்ப்போம்

பயில்வோம் பயில்வோம்
சரித்திரம் பயில்வோம்
முயல்வோம் முயல்வோம்
முகவரிக்காய் முயல்வோம்

விடுவோம் விடுவோம்
வேஷங்கள் விடுவோம்
தொடுவோம் தொடுவோம்
சிகரங்கள் தொடுவோம்.

மதங்கள் கொண்டு
மதங்களில் மறையோம்
ஊர்-வெறி கொண்டு
உறவுவேர் தறியோம்

சுயங்களை விற்று
சுகங்களை வாங்கோம்
நற்திறன்களைப் போற்றி
சுதந்திரம் காண்போம்

இகழ்தலை களைவோம்
நிகழ்தலில் தெளிவோம்
இரும்பாய் நிலைப்போம்
கரும்பாய் இனிப்போம்

எம்மை தீட்டத் தீட்ட
நாமும் வைரமாய்..........

உணர்வுகள்... தொடர்கதை

சில நிமிடத் துளிகள்
சிந்தித்துப் பார்க்கையில்
தித்தித்திடும் சில நினைவுகள்
துளித் துளியாய் - உணர்வுத் துளிகளாய்.....

கனவுகளின் நிலையில்லா
வண்ணங்களின் வளைவுகளில்
மணித்துளிகள் மறைந்திட்ட மாயம்
விடியல்களிலின் வெளிச்சத்தில்.....

பனித் துளிகளின் தேகத்தை
பரிதியொளி தளுவிய மோகத்தில்
கிளர்ந்தெழும் புகைத் துகள்கள்
தேகத்தில் சில்லிட்ட சிலிர்ப்பினில்.....

தார் பூசிய வானமதின்
தவிலொலித் தாளமும்
வாள் வீசும் மேகமதின்
மின்னலொளிக் கோலமும் கைகோர்த்திட ....

தாள் நீங்கிய மேகங்கள்
தான் கொண்ட சூலென
பாரமாய் ஈரமாய் பிரசவிக்கும்
தண்ணீர்த் துளிகளின் குளிர்வினில்.....


சோர்வுகள் நீக்கிடும்......


உணர்வுகள் என்றும் தொடர்கதை.......

Thursday 18 November 2010

கொஞ்சம் காமடி... மிச்சம் ரம்பம்



ஜீஸூக்கும், கிருஷ்க்கும் இடையில் ஒரு கற்பனை உரையாடல்.

முக்கிய குறிப்பு: இது புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. மேலும் பேச்சு முறையிலோ அல்லது அசையழுத்தத்திலோ (accent) ஏதெனும் தவறுகள் இருப்பின் தயவுடன் தாங்கிக் கொள்ளவும்.

பக்கசார்புச் சிந்தனைகளின்றி என்ஜாய் பணண்ணுங்க......


கிருஷ்: என்ன ஜீஸ் பழைய ஞாபங்களின் ரீகேப்பிங்கா... ஆணியடிக்கும்படியா பண்ணிட்டாளே அந்த யூதாஸு என்கிற கடுப்பா... டல்லா இருக்கேள்!

ஜீஸ்: அதெல்லாம் ஒன்னுமில்ல கிருஷ், அந்த யூதாஸ் இல்லீன்னா வேறொரு தாஸ்... போட்டுக் கொடுப்பது, பிடுங்கி தின்பது, வீழ்த்தி ரசிப்பது, விழவிட்டு சிரிப்பது, வாழ்த்தி அழிப்பது, பொறாமையால் அழிவது... என்று ஏகப்பட்ட தில்லாலங்கடி சேவைகள் போதாதென்று... இந்த மனுஷ ஜென்மங்கள் ஓவர் டைம் வேற பண்றாப்ல...

கிருஷ்: அட... என்ன ஜீஸ்... நோக்கு ஏனிந்தக் கொலை வெறி...

ஜீஸ்: அதில்லீங்க கிருஷ்... எங்க பேரைச் சொல்லிச் சொல்லி பூமியில மனுஷ ஐன்மங்கள் பண்ணுற சேட்டைகளை நெனச்சாக்கத்தான் ரொம்ப கடுப்பு கடுப்பா வருது.

கிருஷ்: நீங்க வேற ஜீஸ், இந்த பீலிங்கெல்லாம் வேலைக்காது காணும்..! அவாளுகளையெல்லாம் நெனச்சு அலட்டிக்காம இருக்கிறதுதான் புத்திசாலித்தனமோன்ணோ. நானும் வேலை வெட்டியெல்லாம் விட்டுண்டு 10 birth எடுத்ததுதான் மிச்சம்ன்னு செம காண்டாயிருக்கோன்ணோ.

ஜீஸ்: காண்டாயிருக்கிறதுன்னா??

கிருஷ்: கடுப்பாயிருக்கிறது... பூமியில கற்றிண்ட வொக்காபுலரியாக்கும்.... இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கு... கவனிச்சேள்ணா பேஷறச்சே அடிக்கடி வந்து விழுந்திண்டு இருக்கும்!

ஜீஸ்: ஓ.... அனாலும்... பூமியில இந்த பெரியாராட்டம் மனுஷர்களும்தான் இருந்தாங்க இல்ல!.

கிருஷ்: கிழிஞ்சிது போய்யா ஜீஸ்... சொந்தச் செலவுலயே சூனியம் வச்சிடுவேள் போலிருக்கே... பெரியார பற்றி தெரிஞ்சுமாய் ஓய் இப்படி பேசுறேள்... அவா நம்மளையெல்லாம் சாறு புளிஞ்சு சக்கையா வீசினது போதாதென்றா சொல்ல வாறேள்!

ஜீஸ்: அப்டியில்ல கிருஷ், இருக்குன்னு சொல்லிக்கொண்டு கம்பும் அரிவாளுமா திரியிறத விட, இல்லையின்னு இருந்திட்டாப் பரவாயில்ல போலிருக்கு.... நமக்கும் நேரம் மிச்சம்... 'Round the milky-way in 6000 years' ன்னு பிரபஞ்சம் சுத்த ஓர் tour கிளம்பிடலாம்.

கிருஷ்: பார்த்து காணும் பார்த்து.... இப்ப நாம பேசிக்கிறது மட்டும் நம்ம சொத்தை கேடிகளுக்கு... சாரி... பக்த கோடிகளுக்கு தெரிஞ்சுதுன்னு வையும் காணும்... நம்ம கழுத்திருக்கிற ஏரியாவுல அய்யனாரு பிராண்ட் அரிவாள வீசிண்டு.. நம்ம இடத்துக்கு வேற ஒரு புது பாட்டிய இன்ஸ்டன்டா கிரியேட் பண்ணி அபொயிண்ட்டும் பண்ணிடுவாக... அவாக பிழைப்பு நடக்கணுமோன்ணோ!

ஜீஸ்: அப்டீங்கிறீங்களா கிருஷ்!

கிருஷ்: ஆப்டீயேதான் ஜீஸ்... நம்ம பொஸிசனை நாமதான் காப்பாத்திக்கோணும். ஏன்னா எதுவும் இப்ப நம்ம கண்ரோலில இல்ல... இல்லீன்ணாக்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துண்ட இந்த போட்டோ திருட்டு P.சீடியில ரீலீசாகி இலைமறை blogல்ல வந்திருக்குமோண்ணோ! So we are out of control காணும்.

ஜீஸ்: திருட்டு VCD கேள்விப்பட்டிருக்கேன் கிருஷ். அதென்ன திருட்டு PCD???

கிருஷ்:
Picture Compact Disc... நானா discoverரின்ன meaning காணுமிது ஜீஸு!

ஜீஸ்: உங்க பாஷையில சொன்னா.... ‘பேஷ்.. பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கே‘

கிருஷ்: ஓகே... ஓகே... மிச்ச நேரம் இப்படியே அந்தரத்துலேயே பறந்துண்டு இருந்தாக்க aviation fuel வேஸ்டாயிடுமோன்ணோ...... இருக்கிற விலைவாசியில நேக்கோ நோக்கோ இதெல்லாம் கட்டுப்படியாகாது காணும்... பக்தர்கள் வேற முன்னய மாதிரி நம்மாளையெல்லாம் கவனிச்சுக்கிறதேயில்ல... அவாகவாக அரசியல் அவாகவாக்கு. அத்தோடு நான் ஒரு தடவை மிக்கி கிரகம் வரைக்கும் போய் பக்தர்கள் நிலவரங்களையெல்லாம் அறிஞ்சுண்டு... அப்புறம் பூமி கிரகத்துக்கும் போய் பாபர் மசூதி தீர்ப்புக்கப்புறம் நிலவரம் என்னவென்று ஒரு quick செக்கப் பண்ணிக்கோணும். நம்ம அல்லா நேற்று ‘போன்‘ பண்ணி கூட வருவதாகச் சொன்னாரோன்ணோ!அவாளையும் போறச்சே பிக்கப் பண்ணிக்கணும். நீங்களும் ஜாயிண்ட் பண்ணீக்றேளா ஜீஸ்!

ஜீஸ்: எனக்கும் ஜெர்ரி கிரகத்துல சின்னதா ஒரு வேலையிருக்கு கிருஷ். வழியில அதையும் முடிச்சிட்டு வேணும்னா போலாம்.

கிருஷ்: நோ பிராப்ளம் ஜீஸ்... வாங்க... ஆத்துல சூடா ஒரு கப் காப்பி சாப்பிண்டு கௌம்பலாம்.



நீங்களும் வாங்களேன் கீழே comments cafeயில போய் கூலா ஒரு கோலா சாப்பிட்டு கிளம்பலாம்.......

Wednesday 17 March 2010

புதிய மொந்தையிலும்... அட... பழைய கள்ளுங்கோய்...!

வணக்கம்!.. வாங்க...

புதுசாக்க... ம்ம்ம்... உண்மையிலுமே... ரொம்ப தினுசு தினுசாக்க பல chapterருங்க ரிலீசாயிருந்தாலும் (அட நம்ம ‘கதவ திற... காத்து வரட்டும்‘ மேட்டருதான்) மறக்கப்பட்ட.... இல்லயில்ல... பல பேரால மறைக்கப்பட்ட மேட்டரு இல்லாம போயிருமா?

கவலை கொள்ளாதே மனமே! கண்முன்னே காயங்கள் சரிந்ததைக்கண்டும்... நீ கலங்காது பஜனை செய் மனமே!

ஏப்ரல் 2009ல் கிறுக்கிய கிறுக்கலொன்றை (இப்ப புரியணுமே புதிய மொந்தையிலும்.................... என்றால் என்னன்னு) உங்களுடன் பகிர்ந்துக்க ஓர் ஆவலில் கீழே இணை..த்..து..ள்..... (ஏதோ அசரீரி கேட்டகிறாப் போல இல்ல!)

அசரீரி: ஏம்பா!கவிஜையெல்லாம் எழுத தெரியுமுன்னுட்டு......மொக்கை போடப் போறியளோ???

"ண்ணா... அதெல்லாம் ஒண்ணுமில்லீங்கண்ணா... ஒரு முயற்சி தாணுங்கண்ணா... வாசிச்சப்புறம்.... நல்லது கெட்டதுகளை சொல்லுங்கண்ணா!"




உலகத்தின் இயக்கத்தில்
இதுவுமோர் நாடக மேடையாம்!
உயிர்களை வைத்தே
காட்டுவாரிங்கு வேடிக்கையாம்!
பாரே! நீ வேடிக்கை பார்!
விசித்திர ரசிகன் நீ!
அவர்கள் சிரித்தால் நீ அழுவாய்!
அவர்கள் அழுதால் நீ சிரிப்பாய்!

உணர்வுகளின் கூடாரங்களுள்
கருத்தரித்த சுதந்திரப் பிண்டங்கள்
சருகுகள் போலிங்கு
கருகிப்போகும் குருத்தான செண்டுகள்!
இரவுகள் தோறும் மடியல்கள்
இரத்தத்தில் தோய்ந்த விடியல்கள்
மரண ஓலங்களின் மறைவில்
மரணித்துப்போகும் மனிதநேயங்கள்!
மாண்பு மிகு உலகே
மறைந்திருந்தே வேடிக்கை பார்...!

வீடு வாசல்கள் தோறும்
இழவுகள் தினந்தோறும்
காடுகள் மேடுகள் எங்கும்
கல்லறைகளே நிறைந்து போகும்!
வாழும் மண்ணில் வாழ
வாழ்க்கை கேட்டு நின்றோர்
பாழும் உலகில் இன்று
பயங்கரவாதிகளான கோலம்!
மாண்பு மிகு உலகே
மறைந்திருந்தே நீ வேடிக்கை பார்...!

ஜனநாயகமெனும் போலிப் போர்வை
நாற்காலிகள் மேல் ஒரப் பார்வை
நாவில் வழியும் விஷ வேர்வை
நயவஞ்சக வார்த்தைகளின் கோர்வை!
குள்ள நரிக் கூட்டம்
இரை தேடும் ஓநாய்க் கூட்டம்
தெருநாய்களின் கூட்டம் - ஒன்றாய்ச்
சேர்ந்து போடுகின்றதாம் மனிதாபிமானக் கூட்டம்!
மாண்பு மிகு உலகே
மறைந்திருந்தே வேடிக்கை பார்...!

பாலூட்டி சீராட்டி, பசித்தால் அறிவுச் சோறூட்டி
நேசக் கரத்தால் வலுவூட்டி, வஞ்சகங்களை வடிகட்டி
வாழ்த்தி வழிகூட்டி அனுப்பிவைப்பார் என்றால்....!
போர் மூட்டி, கண்ணில் நீர் ஊற்றி, கருமாதிப் பால் ஊற்றி
நன் நிலை மாற்றி, மனச் சோர்வூட்டி, மோசச் சுமையூட்டி
மிச்சோரையும் இரசாயணத்தில் வாட்டி, பரலோகம் ஏற்றிபின்
அரிதாரம் ஒற்றி, அரங்கேறுகின்றதோர் நயவஞ்சக நாடகம்!
மாண்பு மிகு உலகே
மறைந்திருந்தே வேடிக்கை பார்...!

ஒற்றைத் தடியைக் கொண்டு, உலகை தட்டி வென்று
பெற்ற சுதந்திரம் கண்டு, பெருமை கொண்டார் அன்று,
நூற்றுக் கதராடை கட்டி, செய்கையில் செம்மை நாட்டி
ஒற்றை மலர்ச் சூடி, ஒளிர்ந்தார் குடும்பம் தனை காட்டி,
வெண்தாடித் தந்தையின் ஒளி ஏற்றி, அண்ணனின் அடியையும் பற்றி
பொன்னிற மேனியனும், கரு தேக ராஜனும்
புரட்சிக் கவிஞரும், எண்ணில்லா அறிஞரும்
எல்லாம் கொண்டோர் - இன்று,
வெண்பறவையின் கால்களில் குண்டுகள் கட்டி
உறவுகளின் தலைகளில் இடிகளைக் கொட்டி
சென்னிறக் குளத்தில் முழுநீராடி
செந்தமிழ் தோட்டத்தில் பிணங்கள் மீதிளைப்பாறிபின்
நாமறியோம் பராபரமேயெனக் கண்களில் நீர் கூட்டி
கள்ளக் கதைகள் பல பேசி
தேர்தலை நாடி, மேடைமீதேறி, ஓடியோடி
ஆடுகிறார்களோர் போக்கிரியாட்டம்!
மாண்பு மிகு உலகே
மறைந்திருந்தே வேடிக்கை பார்...!

அது சரி!....
ஓநாய் மீது புகார் என்று சிங்கத்திடம் சென்றதாம் புள்ளிமான்!

ஆட்ட நாயகனும் நீயே, ஆட்டும் நாயகமும் நீயே
விட்ட வில்லவனும் நீயே, தைத்த பாணமும் நீயே
கிள்ளுபவனும் நீயே, தாலாட்டுபவனும் நீயே
எரிப்பவனும் நீயே, அதை அணைப்பவனும் நீயே!
சுற்றிச் சுழன்று நடக்கின்றதோர் கோலாட்டம்
அதில் அத்தனை பேர் மீதும் நூலோட்டம்
வித்தைகள் பல தெரிந்த மேல்மட்டம் - நீ
காட்டுவதோ யமகாத பொம்மலாட்டம்!
சூழ்ச்சித் திரு உலகே
மறைந்திருந்தே நூலாட்டி வேடிக்கை பார்...!

மாவோசேயைக் கண்டாய், மரண மதம் கொண்டாய்
ஷேயைப் புதைத்தாய், தோறாதென உரைத்தாய்
ஹோ ச்சீ, அரபாத், காஸ்ரோ என வரக் கஸ்டங்கள் என்றாய்
மண்டலாய் கண்டு கிண்டலாய் நின்றாய்
மாட்டீன் லூதரை மிக மரியாதையாய்க் கொன்றாய்
ஆண்டுகள் தாண்ட மாற்றங்களென்று மழுப்பினாய்! - இத்தகையதாய்
நீ முன்னொற்று சொல்வாய், பின்னொன்று செய்வாய்
விண்ணென்ற கூரையின் கீழ் இன்னும் என்னென்ன வலைகளை நீ நெய்வாய்!?
தந்திரத் திரு உலகே
மறைந்திருந்தே குழி தோண்டி வேடிக்கை பார்...!

உயிர்களை தோற்றப் புது வழிகள் தேடுகின்றாய்
விண்ணைத் தாண்டி விஞ்ஞானம் வளர்க்கின்றாய்
கடவுளின் துகள்களைக் காண கோடிகள் கருக்குகின்றாய்
காணாக் கிரகங்களில் வாழ வழி தேடி அலைகின்றாய்!
இனி வரும் உயிர்களைக் காக்க இத்துணை ஆயத்தங்கள் செய்யவேண்டியோ
இருக்கும் உயிர்களைக் போக்க அழிவாயுதங்கள் செய்து விற்கின்றாய் நீ!?
உயிர் கொன்ற பணம் கொண்டே உயிர் காக்க வேண்டும் என்றால்
உயிர் நீத்த பிணங்களைத் தின்றும் உயிர் வாழக் கற்றுக்கொள்!

கொடூரத் திருகுதாள பாரே நீ பார்...!
மறைந்திருந்தே மௌனமாக வேடிக்கை பார்
நீ விட்ட அம்புகளே உன்னைத் தைக்கமட்டும்
நீ செய்த கந்தக்காலன்களே உன்னை எரிக்கமட்டும்
உன் கண்ணிகளிலும் மரணபயம் தோன்ற மட்டும்
கால ஓட்டத்தில் நீ காணாமல் போகமட்டும்
நன்றாகவே வேடிக்கை பார்...!!!!